உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இவ்வாறு திருடப்படுகின்றன

இந்தியாவின் அனைத்து கணினியிலுள்ள தகவல்களை கண்காணிக்கவும், பயன்படுத்தவும், வேண்டுமென்றால் அவற்றில் மாற்றம் செய்யவும் 10 அரசு முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, குற்றங்கள் தடுப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவை பேணுதல்" போன்ற பல்வேறு காரணங்களுக்காக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் நாட்டிலுள்ள கணினிகளில் பதியப்பட்டுள்ள தகவல்களை ஆராய்வதற்கு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000ன், 69(1) பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் மின்னணு மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, தேசிய பாதுகாப்பு முகமை, மத்திய நேரடி வரித்துறை, வருவாய் புலனாய்வுப் பிரிவு, நாட்கோடிக்ஸ் பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவுப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளுக்கும், டெல்லியின் காவல் ஆணையருக்கும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அசாம் பகுதிகளுக்கான சிக்னல் இண்டெலிஜென்ஸ் பிரிவு ஆகியவை மேற்கண்ட அதிகாரத்தை பெற்றுள்ளன. 

தேசப்பாதுகாப்பு

அரசின் இந்த உத்தரவின்படி, கணினிகளை நிர்வகிப்பவர்கள் அதை மத்திய அரசின் முகமைகள் கண்காணிப்பதற்கு ஒத்துழைப்பதற்கு மறுத்தால் அதிகபட்சம் ஏழாண்டுகள் சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும்.


கைபேசி செயலிகள்


உதாரணமாக, புகைப்படத்தை எடிட் செய்யும் ஒரு பிரபல செயலியை நீங்கள் இன்ஸ்டால் செய்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது,, கேமரா, தொடர்பு எண்கள், லொகேஷன், ஸ்டோரேஜ், போன்ற பலவற்றிற்கு அனுமதியளித்தால்தான் அந்த செயலியை செயல்படுத்த முடியும் என்கிறது. ஆனால், இந்த இடத்தில் கூர்ந்து கவனித்தீர்களானால், புகைப்படத்தை எடிட் செய்யும் இந்த செயலிக்கு, புகைப்படம், தொடர்பு எண்கள், ஸ்டோரேஜ் ஆகியவை அவசியம்தான். ஆனால், முற்றிலும் தேவையற்ற லொகேஷன், உங்களது இருப்பிடத்தை கண்டறிந்து அதன் மூலம் மிகச் சரியான விளம்பரங்களை உங்களது கைபேசிக்கு அனுப்பி பணம் சம்பாதிப்பதற்காக அனுமதி கேட்கப்படுகிறது.

இதேபோன்று, பல்வேறு செயலிகளில், முற்றிலும் சம்பந்தமேயில்லாத தகவல்கள் கேட்கப்படுகின்றன. கண்மூடித்தனமாக செயலிகளை இன்ஸ்டால் செய்பவர்கள் பல்வேறு தகவல்களுக்கு ஒப்புதல் கொடுத்து செயலியோடு பிரச்சனையையும் இலவசமாக வாங்கி கொள்கின்றனர்.

கூகுள் உள்ளிட்ட தேடுபொறி இணையதளங்கள்


உங்களுக்கு தெரியாமலேயே கூகுள் சேகரிக்கும் பட்டியல் மிகவும் நீண்டது. உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கூகுளின் 'ஆட் சென்ஸ்' என்ற சேவையை பயன்படுத்தியே விளம்பரங்களை ஏற்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களை அடைகின்றன. இன்னும் ஒருபடி மேலே, உங்களது உரையாடலை கேட்டு அதற்குரிய விளம்பரங்களை கூகுள் நிறுவனம் அளித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சிலர் தங்களது இணையதள செயல்பாடு யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் இன்காக்னிட்டோ என்ற அம்சத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நீங்கள் இன்காக்னிட்டோ உள்ளிட்ட எந்த வழியை பயன்படுத்தினாலும் கூகுளால் உங்களது செயல்பாட்டை கண்காணிக்க முடியுமென்று அமெரிக்காவை சேர்ந்த வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

இருப்பினும், சர்வதேச மற்றும் உள்நாட்டு விதிகளின்படி, தனது பயன்பாட்டாளர்கள் குறித்து சேகரிக்கும் தகவல்களை கட்டுப்படுத்தும்/ நீக்கும் உரிமையை கூகுள் வழங்கியுள்ளதால் உங்களை பற்றி தெரிந்து வைத்துள்ள தகவல்கள், பதிவுகள் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள்


ஃபேஸ்புக்கின் மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனையின் காரணமாக சுமார் 14 மில்லியன் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பொதுவாக தெரிவு செய்யும் "ஒன்லி மீ" என்பதற்கு பதிலாக "பப்ளிக்கில்" பதிவுகளை போட்டிருக்கக் கூடும் என்று சமீபத்தில் அந்நிறுவனம் எச்சரித்திருந்தது. இதன் மூலம், தங்களது அந்தரங்க தகவல்களை தங்களுக்கு தெரியாமலேயே பயனாளர்கள் பொதுவெளியில் பகிர்ந்திருக்கக் கூடும்.

கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் லட்சக்கணக்கான ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களின் ஒப்புதல் இன்றி வணிக நோக்கில் பயன்படுத்தியதாக கடந்த மார்ச் மாதம் சர்ச்சை எழுந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஹேக் செய்யப்படும் இணையதளங்கள்


இலவச கிளவுட் ஸ்டோரேஜ் சேமிப்பு, கருத்துக் கணிப்பில் பங்கேற்றால் இலவச கூப்பன், பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி, புதிய கணக்கை துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பலரும் தங்களது அந்தரங்க தகவல்களை உள்ளீடு செய்தோ அல்லது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்ற கணக்குகளை முதலாக கொண்டு நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உள்நுழைகின்றனர்.

உதாரணமாக, கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமான Dropboxன் 164,611,595 கணக்குகளும், LinkedInன் 164,611,595 கணக்குகளும், யாஹூ நிறுவனத்தின் 453,427 கணக்குகளும் என 334 இணையதளங்களின் 5,688,097,942 கணக்குகள் பல்வேறு இணைய ஹேக்கிங் குழுக்களால் திருடப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை இலவசமாக இணையத்தில் எவரும் பார்க்கும், பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது என்று haveibeenpwned என்னும் ஆய்வு இணையதளத்தின் தரவுகள் கூறுகின்றன.

தனிநபர் விழிப்புணர்வின் அவசியம்


ஒரு செயலியையோ, மென்பொருளையோ, இணையதள கணக்கையோ முதன் முதலாக பயன்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான பக்கங்களை கொண்ட விதிமுறைகளை படிக்காமல், அனைத்திற்கும் 'அக்சஃப்ட்' கொடுப்பவர்களுக்கு என்றாவது ஒருநாள் தங்களது அந்தரங்க தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போதுதான் அதன் வீரியம் புரிகிறது. தனிநபர் விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்த்துகிறது.

Comments